குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி கொலையில் 2 பேர் கைது
சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 46). இவர், குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையை திறக்க சென்றபோது ஆனந்தராஜை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சின்னா என்ற ரஞ்சித்குமார் (30), சுண்டு என்ற சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். கொலையான ஆனந்தராஜின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு நாடார்கள் சங்கம் சார்பில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story