தூத்துக்குடி மாநகராட்சியில் சலூன் கடைகளுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும் சங்கத்தினர் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகராட்சியில் சலூன் கடைகளுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கம் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர தலைவர் முருகன், பொருளாளர் சின்னத்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடைகள் (சலூன்) தொழில் வரி கட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு இருப்பதாகவும், அனைத்து கடைகளுக்கும் நோட்டீசும் கொடுக்கப்பட்டு வருகிறது. சலூன் கடைகளுக்கு இதுவரை எந்த ஆணையாளரும் தொழில் வரி விதிக்கவில்லை. ஏற்கனவே கொரோனா காரணமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்தோம். தற்போதுதான் கடையை திறந்து உள்ளோம்.
இந்த நிலையில் சலூன் கடைகளுக்கு தொழில் வரி, உரிமம் கேட்பது எங்கள் கடைகளை அடைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளும். நாங்கள் தினசரி சம்பளம் கூட கிடைக்காமல் மிகவும் வறுமையில் உள்ளோம். ஆகையால் சலூன் கடைக்கு தொழில் வரி லைசென்சு கேட்டு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தொந்தரவு செய்கிறார்கள். ஆகையால் தொழில் வரி மற்றும் உரிமம் ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story