அன்னதான கொட்டகையை அகற்ற எதிர்ப்பு; சிவனடியார்கள் சாலை மறியல்


அன்னதான கொட்டகையை அகற்ற எதிர்ப்பு; சிவனடியார்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2021 10:06 PM IST (Updated: 20 July 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் அன்னதான கொட்டகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சிவனடியார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வடக்கு பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா  மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிவனடியார்களிடம் கேட்டனர்.
 அதற்கு அவர்கள் சிவன் கோவில் சார்பில் தினந்தோறும் சுமார் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அன்னதான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது என்றனர். அதற்கு அதிகாரிகள்,  பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் இந்த கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

 இதனால் வாரம் தோறும் நடைபெறும் மாட்டு சந்தை மற்றும் காய்கறி சந்தைக்கு இந்த கொட்டகை இடையூறாக இருக்கும். எனவே உடனே கொட்டகையை அகற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினர். அதற்கு சிவனடியார்கள், கொட்டகையை அகற்ற வேண்டாம் என கூறினர்.
 இதையடுத்து செயல் அலுவலர் மல்லிகா  அங்கிருந்த பேரூராட்சி பணியாளர்களிடம், அன்னதான கொட்டகையை உடனே அகற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படி பணியாளர்கள், கொட்டகையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் ஆத்திரமடைந்த சிவனடியார்கள் 30-க்கும் மேற்பட்டோர் சந்தைமேடு அருகே தியாகதுருகம்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கொட்டகையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

 தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணலாம் என்றனர். அதனை ஏற்று சிவனடியார்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story