மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை


மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 20 July 2021 10:14 PM IST (Updated: 20 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் முதுநகர் கள்ளசெட்டித்தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 40). மீனவர். சம்பவத்தன்று இவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார். இதையடுத்து அவரது மனைவி கிரிஜா தனது மகனுடன் தாய் வீடான புதுச்சத்திரம் அருகே வேளங்கிராயன்பேட்டைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் கிரிஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் உடனடியாக வந்து பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன.

ரூ.5 லட்சம் நகை கொள்ளை

பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், கதவு பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. 
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த முக்கிய ரேகைகளை பதிவு செய்தனர்.
தொடர்ந்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story