கோவைகேரளா எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
கோவைகேரளா எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
கோவை
ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து கோவை-கேரளா எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார்.
அவர் கோவை சின்னியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர், கோவையில் கொரோனா தொற்று மற்றும் ஜிகா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என்பது பற்றி தமிழக-கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச்சாவடி பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
இ-பாஸ் உள்ளதா?
அப்போது அவர், கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி இ-பாஸ் உள்ளதா? என்று கேட்டார். உடனே அந்த வாகனத்தில் வந்தவர்கள் செல்போனில் இ-பாஸ் வைத்திருந்ததை காட்டினர். இதையடுத்து அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
முன்னதாக அவர், சோதனைச்சாவடி வரும் வழியில் நவக்கரை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல், டெங்கு விழிப்புணர்வு முகாமை பார்வையிட்டார். அப்போது உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உடன் இருந்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு
கொரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற புதிய வகை வைரஸ்களும் பரவுகின்றன. அதே போல் டெங்கு, டெங்குவின் தொடர்ச்சியாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஜிகா வைரஸ் கர்ப்பி ணிகளை தாக்கினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து எல்லை பகுதியிலும் ஜிகா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தீவிர சோதனை செய்ய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில் கோவை- கேரளா எல்லைப்பகுதியான வாளையாறு அருகே பழையதெரு மாவுத்தம்பதி ஊராட்சி பகுதிக்கு நேரடியாக சென்று 95 வீடுகளுக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
ஊழியர்கள் நியமனம்
தேங்கி நிற்கும் மழைநீர், தண்ணீரில் உற்பத்தியாகி ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் பகலில் கடிக்கிறது. இந்த வகை கொசுக்களால் ஜிகா, டெங்கு நோய் பரவுகிறது.
இதில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள விழிப்புணர்வு தேவை. தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணியில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் 20 பேர் வீதம், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 10 பேர் வீதம் ஈடுபட்டு உள்ளனர்.
நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் 14 ஆயி ரத்து 833 வாகனங்களில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாளை யாறு பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல் பட்டு உள்ளனர். கம்பூசியா மீன்களை கொண்டு கொசு புழுக்கள் அழிக்கப்படுகிறது.
கோவைக்கு அதிக அளவு தடுப்பூசி
தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை. தொடர்ந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் தொடங்கி இதுவரை 2,500 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
அதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து எல்லைப்பகுதிகளும், ஊரடங்கு விதிமுறைகள் படி வருவாய், சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னைக்கு அடுத்து கோவைக்கு தான் அதிக அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. கோவையில் 10 லட்சத்து 97 ஆயிரம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னமும் விரைவுப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை பெற்று 75 சதவீதம் பிரித்து மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் வழங்குகிறது.
ஆராய்ச்சி மையம்
தமிழகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. இதில் 1 கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 988 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் வேண்டும். 18 வயது மேற்பட்டவர்கள் 6 கோடி பேர் உள்ளனர். குழந்தைகளை பாதிக்கும் முதுகு தண்டுவட சிகிச்சை தொடர்பாக திருவண்ணாமலையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story