கூடலூர் பகுதியில் தொடர் மழை ராட்சத மரம் சாலையில் விழுந்தது
கூடலூர் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக ராட்சத மரம் சாலையில் விழுந்தது. இதனால் கடைகள் சேதமடைந்தன. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக ராட்சத மரம் சாலையில் விழுந்தது. இதனால் கடைகள் சேதமடைந்தன. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராட்சத மரம் சரிந்தது
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்து வருகிறது. மேலும் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மழை காரணமாக கூடலூரில் இருந்து கோழிக்கோடு, மலப்புரம் செல்லும் சாலையில் இரும்பு பாலம் என்ற இடத்தில் ராட்சத மரம் திடீரென சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
அகற்றும் பணி
இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது. மேலும் மரம் சரிந்ததால் அந்தப்பகுதியில் உள்ள கடை களும் சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷெரீப் தலைமையில் வருவாய்த்துறை யினர் மற்றும் கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாது வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
4 மணி நேரம் பாதிப்பு
சாலையில் விழுந்தது 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ராட்சத மரம் என்பதால் உடனடியாக அகற்ற முடிய வில்லை. இதனால் கடும் போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 2 மணிக்கு அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.
அதன் பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது. 4 மணி நேரத்துக்கு பின்னர் அந்த வழியாக காத்திருந்த சரக்கு வாகனங்கள் சென்றன. முன்னதாக மரம் விழுந்ததால் மின்கம்பிகளும் அறுந்தது.
இதன் காரணமாக தேவாலா உள்பட பல கிராமங்களில் மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது.
மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:-
தேவாலா 18 மி.மீ., பந்தலூர் 12, நடுவட்டம் 10, அப்பர் பவானி, கூடலூர், மேல் கூடலூர்- 7, அவலாஞ்சி, ஓவேலி தலா 5, கிளன் மார்கன், மசினகுடி, கேத்தி, பாடந்தொரை, செருமுள்ளி, சேரங்கோடு தலா 4, ஊட்டி 2 மி.மீட்டர் என பதிவானது.
Related Tags :
Next Story