நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2021 5:27 PM GMT (Updated: 20 July 2021 5:27 PM GMT)

ரெகுநாதபுரத்தில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி, ஜூலை.21-
ரெகுநாதபுரத்தில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்கொள்முதல் நிலையம்
கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
தினமும் 1,500 மூட்டைக்குமேல் நெல் வரத்து உள்ள நிலையில் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் கொள்முதல்நிலையத்தில் நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மழையில் வீணான..
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் நேரடி கொள்முதல் நிலையத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளது. அவ்வப்போது மழை பெய்வதால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ரெகுநாதபுரத்தில் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் டிராக்டர்களை குறுக்கே நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தினர். அப்போது தாமதமின்றி நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story