தமிழ்நாட்டில் உள்ள 6 நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் அமைச்சர் காந்தி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 6 நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் காந்தி கூறினார்.
கல்லாவி:
அமைச்சர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அப்போது முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆணைப்படி, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி மாவட்ட பாரதி கூட்டுறவு நூற்பாலை, எட்டையபுரம், தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலை, அரந்தாங்கி, ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலை ஆகிய 6 நூற்பாலைகள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். அதில், முதற்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீதமுள்ள நூற்பாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழக அரசால் ரூ.7.30 கோடி திட்ட மதிப்பீட்டில் 25,520 கதிர்களுடன் தொடங்கப்பட்டு வணிக ரீதியான உற்பத்தியை தொடங்கி செயல்பட்டு வந்தது. இந்த நூற்பாலைக்கு சொந்தமாக மொத்தம் 26.21 ஏக்கர் நிலம் உள்ளது. ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழக அரசின் நிதியுதவியுடன் ஆலை ரூ.30 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது 20,160 கதிர்களுடன் ஆலை செயல்பட்டு வருகிறது.
புனரமைப்பு பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் அரசு, தேசிய கூட்டுறவு வளர்ச்சிக்கழகம் மூலம் நிதி வசதி பெறப்பட்டு ரூ.19.71 கோடி மதிப்பில் எந்திரங்கள் கொள்முதலுக்கான செலவினம், ரூ.2.06 கோடி மதிப்பில் சிவில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்கான செலவினம், ரூ.3.48 கோடி மதிப்பில் மின்சாதனங்கள், குளிர்சாதனம் மற்றும் ஜெனரேட்டர் பணிக்கான செலவினம் மற்றும் ரூ.3.57 கோடி மதிப்பில் துணைக்கருவிகள் மற்றும் இதர வகைகளுக்கான செலவினம் என மொத்தம் ரூ.28.84 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை புதிய எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டதன் மூலமாக ஆலையின் உற்பத்தி திறன் அதிகரித்ததுடன், அரசின் திட்டங்களுக்கு தேவையான நூல் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்பட்டும், தொழிலாளார்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காசோலை
முன்னதாக, அமைச்சர் காந்தி கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணி ஓய்வு பெற்ற 2 பணியாளர்களுக்கு பணிக்கொடை நிலுவைத்தொகை தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகள் மற்றும் ஒரு பணியாளருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (துணிநூல்) சாரதி சுப்ராஜ், மேலாண்மை இயக்குனர் வரதராஜன், கூட்டுறவு நூற்பாலை மேலாளர் அமல்ராஜ், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், சுவாமிநாதன், நகர செயலாளர் பாபு சிவகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story