நாமக்கல்லில் ‘ஸ்பீடு ரேடார் கன்’ மூலம் கண்காணிப்பு: அதிவேகமாக சென்ற 8 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
நாமக்கல்லில் ‘ஸ்பீடு ரேடார் கன்’ மூலம் கண்காணித்து 8 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:
அதிக வேகம்
நாடு முழுவதும் இயக்கப்படும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என மோட்டார் போக்குவரத்து வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கார் 100 கி.மீ. வேகத்திலும், லாரி 60 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனம் 80 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். ஆனால் அனைத்து வாகனங்களும், அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதன் காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு, உயிர் இழப்பும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டும், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் ஸ்பீடு ரேடார் கன் மூலம் கண்காணித்து, அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபராதம் வசூல்
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், ‘ஸ்பீடு ரேடார் கன்’ மூலம் கண்காணித்து, அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், பாமாபிரியா, கவிதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நாமக்கல் புறவழிச்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ‘ஸ்பீடு ரேடார் கன்’ மூலம், வாகனங்கள் அதிவேகமாக வருவது கண்டறியப்பட்டு, 8 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 41 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், சாலை வரியாக ரூ.94 ஆயிரத்து 400, அபராதமாக ரூ.51 ஆயிரத்து 600 வசூல் செய்யப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடரும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story