பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை டி.ஐ.ஜி. மகேஸ்வரி பேச்சு
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விழிப்புணர்வு கூட்டத்தில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி கூறினார்.
தர்மபுரி:
விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் அருகே உள்ள இருளர் காலனி பகுதியில் காவல்துறை பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் இழந்து தவித்த பண்ணவாடி கிராமத்தை சேர்ந்த 75 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு காவல்துறை சார்பில் அரிசி மற்றும் உணவு பொருட்களை அவர் வழங்கினார்.
உதவிகள் வழங்கப்படும்
அப்போது போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள கைத்தொழில்களை தொடங்க முன் வந்தால் காவல்துறை மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும். அத்தகைய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு காவல்துறை துணையாக இருக்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் வன்முறைகள் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்தி உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. எனவே தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story