மேலப்பாளையம் சந்தையில் குவிந்த பொதுமக்கள்; போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்


மேலப்பாளையம் சந்தையில் குவிந்த பொதுமக்கள்; போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்
x
தினத்தந்தி 21 July 2021 1:05 AM IST (Updated: 21 July 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

77 நாட்களுக்கு பிறகு மேலப்பாளையம் சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர். போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

நெல்லை:
77 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மேலப்பாளையம் சந்தையில் பொதுமக்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

மேலப்பாளையம் சந்தை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளில் ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை மூடப்பட்டது.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகளை வாங்குவதற்கு மேலப்பாளையம் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சந்தையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சந்தையை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

பொதுமக்கள் குவிந்தனர்

இந்த நிலையில் மேலப்பாளையம் சந்தை 77 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகள் ஆடு, மாடுகளை லோடு ஆட்டோ, லோடு வேன்களில் கொண்டு வந்து இறக்கி வைத்து விற்பனை செய்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர். 
மேலப்பாளையம் சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நேற்று விற்பனைக்கு வந்தன. மேலும் பல்வேறு வகையான ஆடுகளும் விற்பனைக்கு வந்தது. அந்த ஆடுகளை ஏராளமான பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.
ரூ.3 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு சில வகையான ஆடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

Next Story