வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி


வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 21 July 2021 2:15 AM IST (Updated: 21 July 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹாசன்: வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

வேறொரு பெண்ணுடன் வந்தார்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஜால்யா கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 29). சுவாமியின் தாய் யசோதம்மா. தம்பி சுனில். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேறொரு பெண்ணுடன் சுவாமி வீட்டுக்கு வந்துள்ளார். 

இதனால் கவிதா, அந்த பெண் யார்? எதற்காக அழைத்து வந்தீர்கள்? என்று சுவாமியிடம் கேட்டுள்ளார். மேலும் சுவாமியை கவிதா கண்டித்ததாக தெரிகிறது. அப்போது சுவாமிக்கு ஆதரவாக அவருடைய தாய் யசோதம்மா, தம்பி சுனில் ஆகியோர் பேசியதாக தெரிகிறது. 

கத்திக்குத்து

அத்துடன் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கவிதாவை அடித்து, உதைத்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் சுவாமி மற்றும் அவருடைய தாய், தம்பி 3 பேரும் சேர்ந்து கத்தியால் கவிதாவை குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கவிதா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், கவிதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சரவணபெலகோலா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்ததை கண்டித்ததால் கவிதாவை கணவர் உள்பட 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து சரவணபெலகோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கவிதாவின் கணவர் சுவாமி, மாமியார் யசோதம்மா, மைத்துனர் சுனில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story