ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கரில் அடர்வனம் அமைக்கும் திட்டம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்


ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கரில் அடர்வனம் அமைக்கும் திட்டம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2021 2:26 AM IST (Updated: 21 July 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கர் இடத்தில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கர் இடத்தில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
குப்பை கிடங்கு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல ஆண்டுகளாக வெண்டிபாளையம் மற்றும் வைராபாளையம் குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்தன. ஈரோடு வைராபாளையத்தில் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது குப்பைகளும் கலந்து ஓடின. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது குப்பைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நீர்வளம் பாதிக்கப்பட்டது.
மேலும் வைராபாளையம் பகுதியில் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. எனவே குப்பைக் கழிவுகள் தண்ணீரில் கலந்ததால் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அடர்வனம்
இந்தநிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பைகளை பிரித்தெடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக அகற்றப்பட்டன. 1 லட்சத்து 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இதில் 1,500 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து குப்பைகள் அகற்றப்பட்ட அந்த பகுதியை அடர் வனமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
400 மரக்கன்றுகள்
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 3.41 ஏக்கரில் சுமார் 400 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அடர்வனப்பகுதியாக மாற்றப்படுவதால் சுற்றுச்சூழல் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார், தி.மு.க. நிர்வாகிகள் வி.சி.சந்திரகுமார், செந்தில்குமார், பி.கே.பழனிசாமி, வி.சி.நடராஜன், கோட்டை ராமு, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story