அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்; கொத்தனார் பலி


அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்; கொத்தனார் பலி
x
தினத்தந்தி 21 July 2021 2:32 AM IST (Updated: 21 July 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழித்துறை:
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 
கொத்தனார்
தக்கலை அருகே திருவிதாங்கோடு, புளியடிவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), கொத்தனார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன்  வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி (50) என்பவர் அமர்ந்திருந்தார். இவர்கள் நேற்று காலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். பாலத்தின் முடிவில் பம்மம் பகுதியில் சென்ற போது முன்னால் பாரத்துடன் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. 
பரிதாப சாவு
அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி   ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சுரேஷ் ஸ்கூட்டருடன் பஸ்சுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
டேவிட்மணி பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். 
போலீஸ் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றார். அவர்கள் படுகாயம் அடைந்த டேவிட் மணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.
இறந்த சுரேசின் உடலை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
இறந்த சுரேசுக்கு கவுசல்யா (39) என்ற மனைவியும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். 
இந்த விபத்து காரணமாக மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story