தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி; கோவை மாவட்டத்தில் விரைவில் தொடக்கம்


தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி; கோவை மாவட்டத்தில் விரைவில் தொடக்கம்
x
தினத்தந்தி 21 July 2021 2:57 AM IST (Updated: 21 July 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் கோவை மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் கோவை மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம்

தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி தேவைகள் குறித்து மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

 கூட்டத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 12 லட்சத்து 65 ஆயிரத்து 89 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) 5 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளது. இன்னும் 2 நாட்களில் மொத்தம் 2 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற உச்சத்தை எட்டி விடும்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி ரூ.1,410-க்கும், கோவிஷீல்டு ரூ.780-க்கும் கட்டணமாக பெறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் முகாம்களில் சென்று தடுப்பூசி செலுத்த செல்கிறார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) நிதியை தனியார் மருத்துவமனைகளுக்கு அளித்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவுபெறும்.

கலெக்டர் கண்காணிப்பார்

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபலமான 117 தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்களிடம் எங்கள் கருத்துகளை எடுத்து சொன்னோம். 

தனியார் மருத்துவமனை உரிமையாளர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அத்துடன் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.61 லட்சத்து 45 ஆயிரம் நிதியை இலவச தடுப்பூசி போட கலெக்டர் மூலம் கொடுத்து உள்ளார்கள்.

இந்த நிதி மூலம் 7 ஆயிரத்து 877 பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடலாம். 45 நாட்கள் கழித்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்து ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் எந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி வழங்கப்பட்டுள்ளது,  எவ்வளவு தடுப்பூசிகள் இலவசமாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என்கின்ற தகவலை பலகையில் ஒட்டி கலெக்டர் கண்காணிப்பார்.

தொழில்முனைவோர்கள் தரும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் எவ்வுளவு தடுப்பூசி போடப்படும், எந்த மருத்துவமனைக்கு அந்த சி.எஸ்.ஆர். நிதி பயன்படுத்தப்படுகிறது என்கிற விளம்பர பலகை அந்தந்த தனியார் மருத்துவமனைகள் முன்பு வைக்கப்படும். கலெக்டரின் கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக...

 இந்தியாவிலேயே முதல் முறைமுறையாக தமிழகத்தில் இத்திட்டம் விரைவில் கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளது. இதுபோல சென்னை, திருச்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் இயக்க திட்டத்துக்கு நிதியாக கோடிக்கணக்கில் வழங்கினார்கள். இதுதவிர மருத்துவ உபகரணங்கள் வாங்கியும் தந்திருக்கிறார்கள். தற்போது சி.எஸ்.ஆர். நிதியை பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசிக்காக வழங்க தயாராக இருக்கிற நிலையில் கோவையில் இத்திட்டத்தை தொடங்கி இருப்பதில் பெருமை அடைகிறோம்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர் தங்களது சி.எஸ்.ஆர். நிதியை தர விரும்பினால் அந்தந்த மாவட்ட கலெக்டரை அணுகி எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை தருகிறோம் அதில் எத்தனை மக்கள் பயன்பெறுவார்கள் என்கிற கருத்துக்களை வழங்கலாம். 

இந்த திட்டம் வெற்றி பெறும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து வந்த புகாரின் பேரில் தமிழகத்தில் 40 மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story