திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்கு


திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 July 2021 6:07 AM GMT (Updated: 21 July 2021 6:07 AM GMT)

திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 19-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்பதற்காக திருமுல்லைவாசல் இருந்து ஊர்வலமாக குடும்பத்தோடு சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் அருகே காந்தி நகர் என்ற இடத்தில் ஊர்வலமாக வந்த மீனவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் 3 மணி நேரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து சென்றனர். இதனால் மூன்று மணி நேரம் சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று சீர்காழி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட 700 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்தல், சமூக இடைவெளியை கடை பிடிக்காதது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story