தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு


தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2021 5:33 PM IST (Updated: 21 July 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

கூடலூர்:

கேரள மாநிலத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கேரள மாநில எல்லையையொட்டி உள்ள பகுதிகளான தேனி மாவட்டம் குமுளி, லோயர்கேம்ப், கூடலூர் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. 

இன்னும் ஓரிரு நாட்களில், பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 இதைக்கருத்தில் கொண்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மலைப்பாதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அதன்படி தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் கணேஷ் பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்கண்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் லோயர்கேம்ப் முதல் குமுளி வரையிலான மலைப்பாதையில் மண் சரியும் இடங்கள், பாறைகள் உருண்டு விழும் இடங்கள், மரங்கள் முறிந்து விழும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய்த்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
------

Next Story