வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை


வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 8:25 PM IST (Updated: 21 July 2021 8:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

ஜெயில் கைதி தலைமறைவு

வேலூர் விருப்பாட்சிபுரம் வாணியகுளத்தைச் சேர்ந்தவர் வேலு என்கிற வேல்முருகன் (வயது 28). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஜெயிலிலிருந்து பரோலில் சென்றார். 19-ந் தேதி மீண்டும் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வேலூர் ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேல்முருகனை தேடி வந்தனர்.

அவர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வரவில்லை என்பதால் ஜெயில் அதிகாரிகளே பரிசோதனை சான்றிதழ் கொண்டு வரும்படி அவரை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்கொலை

இந்தநிலையில் வேல்முருகன் அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயில் அதிகாரிகள் மிரட்டலா?

பரோலில் சென்ற வேல்முருகனுக்கு ஜெயில் அதிகாரிகள் கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேலூர் ஜெயிலில் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை அமைச்சர் ரகுபதியிடம் நேற்று நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர். அதற்கு, பரோலில் சென்ற கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறை காவலர்கள் மிரட்டியதாக கூறுவது உண்மை இல்லை. அவர் ஏற்கனவே 9 முறை பரோலில் சென்று வந்துள்ளார். எனவே அவரை மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

Next Story