சுத்தமில்லாமல் உணவு தயாரித்த 8 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சுத்தமில்லாமல் உணவு தயாரித்த 8 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 2:57 PM GMT (Updated: 21 July 2021 2:57 PM GMT)

சுத்தமில்லாமல் உணவு தயாரித்து விற்பனை செய்த 8 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதி பெற்ற செயற்கை நிறமூட்டிகள் குறிப்பிட்ட இனிப்பு வகைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது மற்றும் கொரோனா சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து 86 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் செயற்கை வண்ணம் பூசப்பட்ட சில்லி சிக்கன் 7 கிலோ, காலாவதியான காளான் 2 கிலோ, அவித்த சிக்கன் 23 கிலோ, லேபிள் ஒட்டப்படாத உணவு பொருட்கள் 3 கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

சுத்தமில்லாத உணவு தயாரித்து விற்பனை செய்த 8 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 4 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை உணவுகளில் பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மீன் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மீன், கோழி இறைச்சியை பொரித்து விற்பனை செய்யும்போது மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்பு திட்டத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதுபோல் துரித உணவு தயார் செய்பவர்கள் தினமும் சமையல் எண்ணையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

உணவகங்களில் உணவு பரிமாறும் போதும், பார்சல் செய்யும் போதும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது. சூடான உணவுப் பண்டங்களை காகிதங்களில் பார்சல் செய்யக்கூடாது. வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இனிப்பு, கார வகைகளை தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதியை குறிப்பிட்டு விற்பனை செய்யவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.

Next Story