கிருஷ்ணராயபுரம் அருகே ஆபத்தான பழைய கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணராயபுரம் அருகே ஆபத்தான பழைய கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கல் வாரச்சந்தை அருகே பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் பிறகு சத்துணவு கூடமாக இயங்கி வந்தது.
நாளடைவில் கட்டிடத்தின் உறுதி தன்மை மோசமாக இருந்ததால் சத்துணவு கூடம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து சுவற்றில் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.
இந்த கட்டிடத்தின் அருகே வாரச்சந்தை செயல்படுகிறது. கட்டிடத்தின் அருகே தண்ணீர் தொட்டியும் உள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க பலர் வந்து செல்கின்றனர். மேலும், கட்டிடத்தின் அருகிலேயே அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது.
ஆகவே, இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு பழமையான இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி வேறு பணிகளுக்கு பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story