பேராசிரியை பெண் போலீசிடம் நகை பறிப்பு


பேராசிரியை,பெண் போலீசிடம் நகை பறிப்பு
x
பேராசிரியை,பெண் போலீசிடம் நகை பறிப்பு
தினத்தந்தி 21 July 2021 8:48 PM IST (Updated: 21 July 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியைபெண் போலீசிடம் நகை பறிப்பு

இடிகரை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீராம புரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது23). இவர் கோவை மாநகர ஆயுதப்படை 4-வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது சகோதரியுடன் மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

கோவை பாலசுந்தரம் ரோடு அருகே ஏ.டி.டி. காலனி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென ஐஸ்வர்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

 இதுகுறித்து ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோல் கோவை, சாய்பாபா காலனி  ராமலிங்க நகர் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவரது மனைவி சாந்தி (வயது46).தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இவர் கல்லூரி பேருந்து மூலம் பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் கல்லூரி பேருந்து மூலமாக வீடு திரும்புவது வழக்கம்.
 
நேற்றுமுன்தினம் அவர் பணி முடிந்து கல்லூரி பேருந்து மூலம் வீடு திரும்பினார். தனது வீட்டின் அருகில் உள்ள சாலை வழியாக அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம ஆசாமி சாந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார்  செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என்பது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்தது. 

இதையடுத்து மர்ம ஆசாமிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம ஆசாமிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story