கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண் தந்தையுடன் கைது


கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண்  தந்தையுடன் கைது
x
தினத்தந்தி 21 July 2021 10:16 PM IST (Updated: 21 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண், தந்தையுடன் கைது செய்யப்பட்டார். அடிக்கடி குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக கைதான மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மன்னார்குடி:
மன்னார்குடி அருகே கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண், தந்தையுடன் கைது செய்யப்பட்டார். அடிக்கடி குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக கைதான மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிணற்றில், பெயிண்டர் பிணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 45). இவர், பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி(40) என்ற மனைவியும் 16, 11 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். 
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென்று மாயமானார். அவரை இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பாண்டியன் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து பாண்டியனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். 
பின்னர் போலீசார், பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தந்தையுடன், பெண் கைது
போலீசாரின் தீவிர விசாரணையில் பாண்டியனை அவரது மனைவி மகேஸ்வரி, தனது தந்தை கோவிந்தராஜூடன் சேர்ந்து கட்டையால் அடித்துக்கொன்று உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்தது. 
இதனையடுத்து மகேஸ்வரி மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதால்
கைதான மகேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது கணவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மதுபோதையில் என்னையும், எனது மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் எனது தந்தையுடன் சேர்ந்து கட்டையால் எனது கணவரை அடித்துக்கொன்று உடலை கிணற்றில் வீசியதாக மகேஸ்வரி தெரிவித்ததாக போலீசார் கூறினர். 
குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்திய கணவரை கட்டிய மனைவியே தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொன்று உடலை கிணற்றில் வீசிய சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story