டெல்டா மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி: 3 மாதங்களுக்குப்பிறகு கொரோனாவால் உயிரிழப்பு இல்லை 176 பேருக்கு தொற்று
டெல்டாவில், 3 மாதங்களுக்குப்பிறகு கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
டெல்டா மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக காணப்பட்டது. அதிலும் குறிப்பாக 2-வது அலை காரணமாக 4 மாவட்டங்களிலும் தொற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது டெல்டா மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொற்று குறையத்தொடங்கியது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான எண்ணிக்கையில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலை இருந்தது.
அதன் பின்னர் டெல்டா மாவட்டங்களில 2-வது அலை காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 40 பேர் வரை இறந்தனர். இதேபோல் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வந்தனர். மே, ஜூன் மாதங்களில் இறப்பு அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தொற்று குறையத்தொடங்கிய பின்னர் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. 4 மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் உயிரிழப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்குப்பிறகு நேற்று டெல்டா மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலை காணப்பட்டது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
நேற்று டெல்டா மாவட்டத்தில் 176 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 102 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 24 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 பேரும், நாகை மாவட்டத்தில் 30 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தஞ்சையில் 152 பேரும், திருவாரூரில் 33 பேரும், மயிலாடுதுறையில் 28 பேரும், நாகையில் 21 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 66 ஆயிரத்து 814 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 834 பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 508 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 363 பேர் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 286 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story