வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடும் இடங்களில் சிறப்பு குழு ஆய்வு


வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடும் இடங்களில் சிறப்பு குழு ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2021 10:39 PM IST (Updated: 21 July 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடும் இடங்களில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடும் இடங்களில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

சிறப்பு குழு அமைப்பு 

வால்பாறை நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அனைத்துத்துறையினர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழுவில் உதவி வனப்பாதுகாவலர் கள் பிரசாந்த், செல்வம், தாசில்தார் ராஜா, நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், ஓய்வு பெற்ற வனத்துறை டாக்டர் மனோகரன், கோவை வனத்துறை டாக்டர் சுகுமார், இயற்கை வனவளபாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ்ஆனந்தி, வனச்சரகர்கள் மணி கண்டன், ஜெயச்சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் சவரிமுத்து ஆகியோர் உள்ளனர். 

ஆலோசனை கூட்டம் 

இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் வால்பாறையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:- 

வால்பாறை நகரில் அனைத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தை வரும் இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது, ஊருக்குள் கால்நடைகள் நடமாட்டத்தை கண்டறிந்து தடுப்பது, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. 

மேலும் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் குடியிருப்பு மக்களை கொண்ட குழு அமைப்பது, வனத்துறை, வருவாய்த்துறை, போலீசார், மருத்துவத்துறை, தன்னார்வலர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து குடியிருப்புக்குள் சிறுத்தை வருவதற்கான காரணத்தை கண்டறிவது. 

அதிகாரிகள் ஆய்வு 

இரவு நேரங்களில் வனப்பகுதிகளை ஒட்டிய இடங்கள், சாலைகளில் அத்துமீறி நடமாடும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவது, வெளியூர் களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் உரிய நேரத்திற்குள் தங்கும் இடங்களுக்கு வந்து சேர்வதை உறுதிப்படுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் செய்யப்பட்டன.  

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வால்பாறை நகர் பகுதியில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகப்பகுதி, நகராட்சி மார்கெட் பகுதி, கூட்டுறவு காலனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு 

அப்போது மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தா மல் குடைகளை பிடித்துக்கொண்டு தாசில்தார் ராஜா தலைமையில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் அவர்கள் கூறும்போது, பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் தெருவில் நடமாடி வருவதால், அவற்றை வேட்டையாட சிறுத்தை ஊருக்குள் வருகிறது. 

எனவே கால்நடைகளை வளர்ப்பவர்கள், வீடுகளில் முறையாக அடைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.


Next Story