இறக்கையில் தீப்பிடித்த காகம், கூரையில் விழுந்ததில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


இறக்கையில் தீப்பிடித்த காகம், கூரையில் விழுந்ததில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 21 July 2021 10:40 PM IST (Updated: 21 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

மின்கம்பியில் அமர்ந்திருந்தபோது மின்சாரம் தாக்கியதில் இறக்கையில் தீப்பிடித்த காகம், கூரையில் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

தஞ்சாவூர், 

தஞ்சை ராஜப்பா நகர் செங்கமல நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 37). கூலித்தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்த குடிசை வீட்டின் அருகே செல்லும் உயர்அழுத்த மின் கம்பிகளில் வழக்கமாக நிறைய காகங்கள் அமர்ந்து இருக்கும்.

நேற்றும் வழக்கம்போல் அந்த மின்கம்பிகளில் காகங்கள் அமர்ந்து இருந்தன. அப்போது மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஒரு காகத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அந்த காகம் தூக்கி வீசப்பட்டது.

காக்கையின் மீது மின்சாரம் தாக்கியபோது டமால்... என சத்தம் கேட்டதால் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த சுந்தரம் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து என்ன சத்தம்?் என பதற்றத்துடன் பார்த்தனர்.

அந்த நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காகத்தின் இறக்கையில் தீப்பற்றி எரிந்தது.

மின்சாரம் தாக்கியதில் அந்த காகம் பலியானதுடன் தீயுடன் சுந்தரத்தின் குடிசையின் மேற்பகுதியில் விழுந்ததால் அந்த குடிசையும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று சற்று வேகமாக வீசியதால் சுந்தரம் வீட்டில் பிடித்த தீ பக்கத்தில் உள்ள சீரங்காய்(70), ஆனந்தன் ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவியது.

இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் டி.வி., பீரோ, உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தாலும் சுந்தரம் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. சீரங்காய், ஆனந்தன் ஆகியோரது வீடுகள் முக்கால்வாசி எரிந்து சாம்பலானது.

மேலும் வீடுகளில் இருந்த வீட்டு பத்திரங்களும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

தீ விபத்து குறித்து தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story