தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்


தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
x
தினத்தந்தி 21 July 2021 11:19 PM IST (Updated: 21 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

ஊட்டி,

ஊட்டி, பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, நடுவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக மழை பதிவாகிறது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எல்க்ஹில் போன்ற உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளை மேகமூட்டம் சூழ்ந்ததால் கடும் குளிர் நிலவியது. 

இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தொடர் மழை காரணமாக விளைநிலங்களை ஒட்டி உள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்தது. சாலையோரம் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்கிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு, மரங்கள் விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்தரத்தில் வீடுகள்

இதற்கிடையில் புதுமந்து சாலையோரத்தில் கற்களால் கட்டிய தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகிறது. அங்கு வசிப்பவர்கள் பீதியடைந்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் சில இடங்களி்ல தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது தவிர சாலையோரம் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மின்கம்பங்கள் சேதம்

பந்தலூர் தாலுகாவில் பெய்த மழையால் கொளப்பள்ளி அருகே  உள்ளகுறிஞ்சி நகர் பகுதியில் மின்கம்பிகள் மீது மரம் சாய்ந்தது. இதனால் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. அவை வீடுகள் மற்றும் சாலை மீது விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, வீடுகளில் மின்தடை ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மழவன்சேரம்பாடி அருகே சாமியார் மலையடிவாரத்தில் கணேசன், புண்ணியமூர்த்தி, செல்வராஜ் உள்பட சிலரது வீட்டின் பின்புறத்தில் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டது. 

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-3.4, நடுவட்டம்-22, கிளன்மார்கன்-22, குந்தா-10, அவலாஞ்சி-49, எமரால்டு-17, அப்பர்பவானி-24, கூடலூர்-21, தேவாலா-25, செருமுள்ளி-18, பாடாந்தொரை-22, பந்தலூர்-44, சேரங்கோடு-12 என பதிவாகி உள்ளது.


Next Story