பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் தியாக திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை 9.30 மணிக்கும், 10.30 மணிக்கும் ஹஸ்ரத் சுல்தான் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் பலர் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்த பிறகு வெளியே வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தியாக திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
மேலும் ஊட்டி சின்ன பள்ளிவாசல், காந்தல் பள்ளிவாசல், பிங்கர்போஸ்ட் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். முன்னதாக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களது கடைசி கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடு, மாடு போன்றவற்றை பலியிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினர். இதேபோல் குன்னூரில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. வழக்கமாக பண்டிகையின்போது முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவார்கள். மழை பெய்ததால் பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தது. மேலும் மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
தானம் வழங்கிய முஸ்லிம்கள்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கூடலூர் நகரில் உள்ள பெரிய மற்றும் சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேல் கூடலூர், நடுவட்டம், மசினகுடி, தேவர்சோலை, பாடந்தொரை, நெலாக்கோட்டை, பிதிர்காடு, சேரம்பாடி, எருமாடு ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற்றது.
பின்னர் முஸ்லிம்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஏழைகளுக்கு தானம் வழங்கினர்.
Related Tags :
Next Story