13 படகுகளுக்கு மீன்பிடிக்க தடை
ராமேசுவரத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 13 படகுகளுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 13 படகுகளுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
புகார்
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒருசில விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் மீன்துறை அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் ராமேசுவரத்தில் 13 விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து உள்ளதால் அந்த படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அப்போது இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீனவர் சங்கம் மூலம் புகார் கொடுக்கப்பட்ட 13 விசைப்படகுகளுக்கு மட்டும் மீன்துறை அதிகாரிகளால் அனுமதிச்சீட்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
13 படகுகளுக்கும் இன்னும் ஒரு வாரத்திற்குமேல் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசல் வழங்கப்படாது எனவும் உத்தரவை மீறி இந்த படகுகள் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஆய்வு
மேலும் ராமேசுவரத்தில் உள்ள மற்ற விசைப்படகுகளில் ஏதேனும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகள் உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் நேற்று மீன்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு மூலம் சென்று பல்வேறு படகுகளில் ஆய்வு செய்தனர்.
மற்ற படகுகளில் எதிலும் தடை செய்யப்பட்ட வலைகள் இல்லை என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story