முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 6:01 PM GMT (Updated: 2021-07-21T23:31:44+05:30)

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை நபிகளின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகையை அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

விழுப்புரத்தில் தொழுகை

அந்த வகையில் விழுப்புரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்ததோடு கொரோனா பாதுகாப்பு வழிமுறையாக முக கவசம் அணிந்தபடி சென்றனர். அங்கு பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் திரவத்தை பயன்படுத்திய பிறகு  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசல், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித், வண்டிமேடு மஹல்லா மஸ்ஜித், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

குர்பானி

பின்னர் தொழுகை முடிந்ததும் பள்ளிவாசல்களை விட்டு வெளியே வந்த அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள், ஏழை, எளிய மக்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் குர்பானியாக அசைவ உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூட்டு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை இமாம் அப்துல்மாலிக் நடத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் லப்பை இப்ராஹீம், கிளை தலைவர் முஜிபுர்ரஹ்மான் உள்பட 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலும் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பூசி

மேலும் தொழுகை முடிந்ததும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகம் முகாம் ஏற்பாடு செய்தது. அந்த முகாமில் முஸ்லிம்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்


Next Story