2,956 பேருக்கு உடற்தகுதி தேர்வு
சீருடை பணியாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,956 பேருக்கு உடற்தகுதி தேர்வு வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 20 மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த எழுத்து தேர்வில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என மொத்தம் 2,956 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முன்னேற்பாடு பணிகள்
இத்தேர்வையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சிறைத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பேசியதாவது:-
கொரோனா பரிசோதனை
தேர்வர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும் ஆஜராக வேண்டும். தேர்வுக்கு வரும் நபர்கள் தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை எடுத்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்று வர வேண்டும். அவ்வாறு மருத்துவ சான்று பெற்று வராத தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். கொரோனா தொற்று உள்ளவர்கள் தேர்விற்கு பங்கேற்க வரத்தேவையில்லை. அதற்கு மாறாக 3-ம் நபர் மூலம் விண்ணப்பம், அழைப்பு கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவ சான்றுடன் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு மைய தலைவரிடம் நேரில் தெரிவித்தால் அந்த நபர்களுக்கு பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை 300 தேர்வர்களும், 9 மணிக்கு மேல் 200 தேர்வர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்கூறு அளக்கப்பட்டு அதில் தகுதியுள்ளவர்களை உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் தகுதி பெற்ற நபர்கள், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி முதல் தினமும் 500 பேர் வீதம் உடல்திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
செல்போன் கொண்டு வர தடை
இத்தேர்வுக்கு கலந்துகொள்ள வரும் தேர்வர்கள் கண்டிப்பாக 2 முக கவசம் எடுத்துவர வேண்டும். தேர்வர்கள் வரும்போது ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அசல் சான்றிதழ்களை கட்டாயமாக கொண்டு வருதல் வேண்டும். அனைவரும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தேர்வில் கலந்துகொள்ள வரும் தேர்வர்கள் செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
சிபாரிசு
தேர்வு நடைபெறும் இடத்திற்கு அருகிலோ அல்லது வேறு இடத்திலோ சிபாரிசு மூலம் வேலை வாங்கித்தருவதாக வெளிநபர்கள் கூறினால் யாரும் அதனை நம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலும், கண்காணிப்பு கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு நடைபெறும் தேர்வாகும்.
எனவே தகுதியுள்ள நபர்கள் அச்சமின்றி கலந்துகொண்டு திறமையின் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story