ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2021 11:44 PM IST (Updated: 21 July 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

காணை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கஞ்சனூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.09 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தீவன வளர்ப்பு பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் வெங்கந்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.95 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியை பார்வையிட்ட அவர், தரமான முறையில் சாலை அமைக்கும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து, மங்களபுரம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை பார்வையிட்டதோடு இத்தொட்டியில் தண்ணீரை ஏற்றி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தினார்.

நாற்றங்கால் பண்ணை

அதன் பிறகு கக்கனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.44.85 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 பயனாளிகளின் வீடுகளையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிப்பு மையத்தையும், வீரமூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.21.92 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள நாற்றாங்கால் பண்ணையையும் கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story