பரமத்தி அருகே கணவர் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் சாவு-கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
பரமத்தி அருகே கணவர் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் பலியானார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
இரும்பு கம்பியால் தாக்குதல்
நாமக்கல் தாலுகா பரமத்தி அருகே உள்ள கோனூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ராஜூ என்கிற வரதராஜ் (வயது 65). தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜ், கீழ்சாத்தம்பூர் பெருமாபாளையம் எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்த சம்பூர்ணம் (55) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கோனூர் அருந்ததியர் காலனியில் ஒன்றாக வசித்து குடும்பம் நடத்தி வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16-ந் தேதியும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வரதராஜ் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி சம்பூர்ணத்தை தலை மற்றும் பல்வேறு இடங்களில் தாக்கினார். இதனால் அவர் படுகாயமடைந்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொலை வழக்கு
இதனிடையே மனைவியை தாக்கியதால், போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வரதராஜ் வீட்டை பூட்டி கொண்டு வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வரதராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பூர்ணத்திற்கு கடந்த 4 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த பரமத்தி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சம்பூர்ணம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வரதராஜ் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வரதராஜுக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story