தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்தால் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்-கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேட்டி


தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்தால் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்-கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2021 6:29 PM GMT (Updated: 21 July 2021 6:29 PM GMT)

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்தால் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறினார்.

நாமக்கல்:
காத்திருப்பு போராட்டம்
தமிழகத்தில் உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மணலுக்காக காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக மாநிலத்தில் அரசு மணல் வழங்கவில்லை. இதனால் கட்டுமான பணிகள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. மணல் கிடைக்காமல் சாதாரண பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு எம்.சாண்ட் பயன்படுத்த கூறியது. ஆனால் அதற்கான எந்த தரக்கட்டுப்பாடு வழிமுறையையும் தெரிவிக்கவில்லை. எம்.சாண்ட் தரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு கூட அமைக்கப்படவில்லை.
ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்
பொதுமக்கள் மணலுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக நாங்கள் போராட வில்லை. மணல் குவாரிகள் தொடங்கப்பட்டால் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மணல் கிடைக்கும்.
ஆறுகளில் எந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தலில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளிக்கிறோம். விரைவில் மணல் குவாரிகளை திறக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜசேகர், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பரமசிவம், மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story