தேன்கனிக்கோட்டை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 12 பேர் கைது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்


தேன்கனிக்கோட்டை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 12 பேர் கைது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 July 2021 6:29 PM GMT (Updated: 21 July 2021 6:29 PM GMT)

தேன்கனிக்கோட்டை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 12 பேர் கைது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 12 ேபர் கைது செய்யப்பட்டனர். நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எச்சரிக்கை
தேன்கனிகோட்டை காவல் உட்கோட்ட சரகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, மற்றும் அஞ்செட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தது. இதனையடுத்து தாமாக முன்வந்து நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என 15 நாட்களுக்கு முன்பு போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
இதனையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வினி வழிகாட்டுதலின்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், உத்தனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், மஞ்சுநாதன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உத்தனப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். 
கைது
அப்போது பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக பெரியநாக தொணையை சேர்ந்த நாகராஜ் மகன் அருண்குமார் (வயது 22), கடூரை சேர்ந்த சின்னசாமி (42), நரசிம்மன் மகன் கோபி (23). ஆண்டியப்பன் (37), முனியப்பன் (47). பைரப்பா மகன் கோவிந்தன் (27), பாவாடப்பட்டி சின்னராஜ் (58) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மற்றும் தொட்டி குப்பம் கிராமத்தை சேர்ந்த குண்டா என்ற நாராயணப்பா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 11 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டு துப்பாக்கி தயாரிப்பு
 தளி அருகேயுள்ள உனிசேநத்தம் நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்யப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உனிசேநத்தம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ், காவேரிபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் மற்றும் தளியை சேர்ந்த இம்ரான் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தயார் செய்யும் நாட்டு துப்பாக்கிகளை தேன்கனிக்கோட்டை மற்றும் கர்நாடகா மாநில எல்லையோர பகுதி கிராமங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள உனிசேநத்தம் கிராமத்தை சேர்ந்த நஞ்சாச்சாரி, கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த ஜெயராம், நெல்லுமார் பகுதியை சேர்ந்த உபேந்திரா ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story