கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்


கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்
x
தினத்தந்தி 21 July 2021 7:51 PM GMT (Updated: 21 July 2021 7:51 PM GMT)

20 ஆண்டுகளுக்கு பிறகு கழை கூத்து கலைஞர்களுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொம்ரா என்ற இன மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தங்கியிருந்து கயிறு மீது நடப்பது, தெருக்கூத்து, சாட்டையை உடம்பில் அடித்துக்கொள்ளுதல், பாம்பு மற்றும் விலங்குகள் வைத்து குழந்தைகளுக்கான வித்தைக்காட்டுதல் போன்ற தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதன் அடிப்படையி்ல் இவர்களுக்கு சாதிச்சான்று மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி. தலைமை தாங்கி கழை கூத்து கலைஞர்கள் 25 பேருக்கு தொம்ரா என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.பின்னர் அவர் கூறும் போது,
கழை கூத்தாடிகள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல் சிங்கம்புணரி பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இவர்களுக்கு சொந்தமாக அரசு வீட்டுமனை வழங்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக மானாமதுரை தாலுகாவில் சன்னதி புதுக்குளம் பகுதியில் 11 குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்தரராஜன், மானாமதுரை தாசில்தார் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story