திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 7 பவுன் நகைகள், பணம் திருட்டு


திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 7 பவுன் நகைகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 July 2021 7:52 PM GMT (Updated: 2021-07-22T01:22:20+05:30)

திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகர் குலோத்துங்கன் சாலையை சேர்ந்தவர் சூரியகுமார் (வயது 71). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி சென்னையில் உள்ள தனது 2-வது மகள் வீட்டிற்கு சூரியகுமார் தனது மனைவியுடன் சென்றார்.

பின்னர் நேற்று காலை 5 மணிக்கு அவர்கள் திருச்சிக்கு வந்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

நகை, பணம் திருட்டு

அப்போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் திருட்டு போயிருந்தன. இதுபற்றி சூரியகுமார் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில், சூரியகுமார் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோ அருகே இருந்த மேஜையில் இருந்து சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story