சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்


சுயமாக தொழில் தொடங்க  மானியத்துடன் வங்கி கடன் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 July 2021 7:52 PM GMT (Updated: 2021-07-22T01:22:30+05:30)

முதல் தலைமுறை தொழில்முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.


திருச்சி, 
முதல் தலைமுறை தொழில்முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

முதல் தலைமுறை தொழில்முனைவோர் 

திருச்சி மாவட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவியுடன் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும். 

இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்ட மதிப்பீடுள்ள உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழியாக தகுதியுடைய தொழில் முனைவோருக்கு கடன் வசதி ஏற்படுத்திதரப்படும். திட்ட மதிப்பீட்டின் நிலையான மூலதனத்தில் 25 சதவீதம் ரூ.50 லட்சம் வரை மூலதன மானியமாகவும், வங்கி கடனை தவறாமல் முறையாக திருப்பி செலுத்துவோரை ஊக்குவிக்கும் பொருட்டு வங்கி கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படுகிறது.

ரூ.795 லட்சம் இலக்கு

திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு வகைப்பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக கொண்டு வர வேண்டும். திருச்சி மாவட்டத்துக்கு நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 98 பேருக்கு ரூ.795 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லேத்ஒர்கஸ், அரிசிஆலைகள், எண்ணெய் ஆலைகள், வாழை சார்ந்த பொருட்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், உணவகங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி, மருத்துவ பரிசோதனை நிலையம், உடற்பயிற்சி நிலையங்கள், ஸ்கேன் சென்டர், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர் உள்பட பல்வேறு வகையான அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

நடப்பு நிதியாண்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வில் இருந்தும், தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்தும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2460331 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story