காட்டுக்குள் அடித்துக் கொன்ற 3 தொழிலாளர்கள் ஓராண்டுக்கு பிறகு கைது
வனவிலங்கு தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டவரின் வழக்கில் திடீர் திருப்பமாக, காட்டுக்குள் அவரை அடித்து கொன்ற 3 தொழிலாளர்களை ஓராண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
குலசேகரம்:
வனவிலங்கு தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டவரின் வழக்கில் திடீர் திருப்பமாக, காட்டுக்குள் அவரை அடித்து கொன்ற 3 தொழிலாளர்களை ஓராண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி சாவு
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வலியமலை காணி குடியிருப்பில் வசித்தவர் சுரேஷ் (வயது 39), தொழிலாளி. இவருடைய மனைவி லீலா. சுரேஷ் காட்டுப்பகுதியில் உள்ள பனை உள்ளிட்ட மரங்களில் இருந்து ‘கள்’ எடுத்து குடிப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. இதுபற்றி குலசேகரம் போலீசில் லீலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுரேஷ் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் உடலில் காயங்கள் இருந்தன.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வனவிலங்கு தாக்கியதால் இறந்ததாக கூறப்பட்டது. அதன்பேரில் மர்ம சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆயுதம்
அப்போது சுரேஷ் உடலில் இருந்த காயங்களுக்கு விலங்கு தாக்கியது தான் காரணமா? என்பது குறித்து பல்வேறு நிபுணர்களிடம் போலீசார் கருத்து கேட்டனர். அப்போது அவர் உடலில் இருந்த காயத்தின் அடிப்படையில் வன விலங்கு தாக்கி அவர் இறக்கவில்லை. உடலில் உள்ள காயங்கள் ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டுள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சுரேஷ் இறப்பதற்கு முன் கடைசியாக அவருடன் இருந்தவர்கள் பற்றி விசாரித்தனர். அப்போது துப்பு கிடைத்தது. அதன் பேரில் வலியமலை காணி குடியிருப்பை சேர்ந்த சிவராமன் (52), மனோகரன் (31), மணிகண்டன் (33) ஆகியோர் இருந்ததும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுரேசை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததும், ஓராண்டுக்கு பின் தெரிய வந்தது.
3 பேர் கைது
அதைத்தொடர்ந்து சுரேஷ் மர்ம சாவை குலசேகரம் போலீசார் கொலை வழக்காக மாற்றி சிவராமன், மனோகரன், மணிகண்டன் ஆகிய 3 பேர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது. அதன் விவரம் வருமாறு:-
சுரேஷ், சிவராமன், மனோகரன், மணிகண்டன் ஆகியோர் ஒரே தோட்டத்தில் வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் மற்றும் சிவராமன் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது சிவராமனை, சுரேஷ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் மீது சிவராமன் கோபத்தில் இ்ருந்து வந்தார்.
நாடகம்
இந்த நிலையில் சம்பவத்தன்று 4 பேரும் காட்டுப்பகுதிக்கு சென்று ‘கள்’ இறக்கினார்கள். அப்போது சுரேஷ் வைத்திருந்த கள்ளை மற்ற 3 பேரும் திருடியதாகவும், அதை கேட்ட சுரேசை 3 பேரும் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கியதாகவும், ஏற்கனவே சுரேஷ் மீது கோபத்தில் இருந்த சிவராமன் இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தாக்கியதும் தெரிய வந்தது. இதில் சுரேஷ் இறந்ததும் உடலை காட்டிலேயே போட்டு விட்டு 3 பேரும் ஊருக்கு திரும்பி விட்டனர்.
பின்னர் உடலை போலீசார் மீட்ட போது வனவிலங்கு தாக்கி இறந்ததாக 3 பேரும் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொழிலாளி கொலை வழக்கில் ஓராண்டுக்கு பிறகு 3 பேர் கைது செய்யப்பட்டது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story