உப்பள்ளி- தார்வாரில் 1,300 ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
உப்பள்ளி-தார்வாரில் 1,300 ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள் பயன்படுத்தி வந்த ஆயுதங்கள் சிக்கின. மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 பேரை மாவட்டத்தை விட்டு போலீசார் வெளியேற்றினர்.
உப்பள்ளி: உப்பள்ளி-தார்வாரில் 1,300 ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகள் பயன்படுத்தி வந்த ஆயுதங்கள் சிக்கின. மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 பேரை மாவட்டத்தை விட்டு போலீசார் வெளியேற்றினர்.
குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்ட பின்னர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. மேலும் சில ரவுடிகள் சிறைகளில் இருந்தபடியே குற்றச்சம்பவங்களை அரங்கேற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். மேலும் பெங்களூருவில் 2 ஆயிரம் ரவுடிகள் வீடுகளில் சோதனையும் நடந்து இருந்தது.
போலீஸ் கமிஷனர் உத்தரவு
இதுபோல வடகர்நாடகத்தில் உள்ள இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வாரிலும் கடந்த சில தினங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்களை மிரட்டி ரவுடிகள் ஆயுதங்களை காட்டி கொள்ளை அடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் பொதுமக்களை மிரட்டி ரவுடிகள் பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இதனால் உப்பள்ளி-தார்வாரில் உள்ள ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் லாபுராம், போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
ரவுடிகளின் வீடுகளில் சோதனை
அந்த உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தலைமையில் உப்பள்ளி-தார்வாரில் உள்ள 1,300 ரவுடிகளின் வீடுகளில் கடந்த 5 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரவுடிகளின் வீடுகளில் இருந்து பட்டா கத்தி, அரிவாள், வாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.
பின்னர் போலீசார் ரவுடிகளை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்று தற்போது செய்து வரும் தொழில்கள் குறித்து விசாரித்தனர். மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட கூடாது என்றும் ரவுடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
50 பேர் வெளியேற்றம்
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லாபுராம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
உப்பள்ளி-தார்வார் நகரில் குற்றச்சம்பவங்களை குறைக்கவும், மாநகராட்சி தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் 1,300 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரவுடிகளை போலீசாரும் எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளனர்.
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 ரவுடிகளை மாவட்டத்தை விட்டு வெளியேற்றி உள்ளோம். இதில் சிலர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுத்து வந்தனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் போலீசார் எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story