கர்நாடகத்தில் 26-ந்தேதி கல்லூரிகள் திறப்பு


துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்.
x
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண்.
தினத்தந்தி 21 July 2021 9:05 PM GMT (Updated: 2021-07-22T02:35:02+05:30)

கர்நாடகத்தில் கல்லூரிகள் வருகிற 26-ந் தேதி திறக்கப்படுகிறது. மாணவர்கள் விரும்பினால் நேரடி வகுப்பில் பங்கேற்கலாம் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கல்லூரிகள் வருகிற 26-ந் தேதி திறக்கப்படுகிறது. மாணவர்கள் விரும்பினால் நேரடி வகுப்பில் பங்கேற்கலாம் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

தடுப்பூசிகள்

டோக்கிய ஒலிம்பிக் போட்டி குறித்த கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கல்லூரிமாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசிடம் உள்ள தடுப்பூசிகள் அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

கொரோனா பரவல்

நேரடி வகுப்புகளுக்கு ஆஜராக விரும்பும் மாணவர்கள் கட்டாயம் குறைந்தபட்சம் ஒரு டோஸ் ஆவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் இதுவரை 75 சதவீத கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே இருக்கும் டிஜிட்டல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு மாணவர்களுக்கு அரசே மடிகணினி மற்றும் கையடக்க கணினியை வழங்கியுள்ளது.

கர்நாடகத்தில் வருகிற 26-ந் தேதி கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் நேரடி வகுப்புகளுக்கு வரலாம். இல்லாவிட்டால் ஆன்லைன் மூலமாக தொடர்ந்து கல்வி கற்கலாம். வகுப்புகளுக்கு ஆஜராவது கட்டாயமல்ல. கல்லூரிகளில் கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைவெளி

மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தனியாக ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாம் அனைவரும் நமது வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். போட்டி நடைபெறும் 15 நாட்களும் நாம் அதை தொடர்ந்து பார்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வீரர்களுக்கு ஆதரவாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் நாம் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

Next Story