பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: சேலம் பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை- திரளானவர்கள் பங்கேற்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
சேலம், ஜூலை.22-
பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் நேற்று முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், மசூதிகளில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.
சேலம் டவுன் ஜாமியா மஜீத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அவர்கள் புத்தாடைகளுடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகையில் பங்கேற்றனர். இந்த தொழுகையில் பங்கேற்ற சிறுவர்கள், ஒருவருக்கு ஒருவர் கைகளாலும், கட்டி தழுவியும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
சேலம் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா பரவல் காரணமாக ஒருசில முஸ்லிம்கள், தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையை நடத்தினர். அப்போது அவர்கள், அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அளவுக்கு குர்பானி கொடுத்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, கோட்டை, குகை, கொண்டலாம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்கள் மற்றும் மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்ததாக முஸ்லிம்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டும் இதேபோல் பக்ரீத் பண்டிகை மிக எளிமையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story