பாலக்கோடு அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 11 பேர் கைது


பாலக்கோடு அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 11 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 4:26 AM IST (Updated: 22 July 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு,

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்படி நேற்று மாரண்டஅள்ளி 4 ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கடூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 33) என்பது தெரியவந்தது.

இவரும், இவருடைய தந்தை எல்லப்பனும் (69) வீட்டில் நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் பிடிபட்ட சங்கரிடம் யார் யாருக்கு நாட்டு துப்பாக்கி விற்பனை செய்தார்கள் என விசாரணை செய்தனர். 

அதில் மாரண்டஅள்ளியை சேர்ந்த ரஜினி (41), சீரியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (40), கிருஷ்ணன் (52), கரகூரை சேர்ந்த முல்லேசன் (26), மல்லப்பன் (50), அன்பு (32), சொக்கன் (45) உள்ளிட்ட 11 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சங்கர், எல்லப்பன் உள்பட 11 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story