பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை முஸ்லிம்கள் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை முஸ்லிம்கள் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்
x
தினத்தந்தி 22 July 2021 7:00 AM IST (Updated: 22 July 2021 7:00 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பள்ளிப்பட்டு,

நாடு முழுவதும் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் வசித்து வரும் முஸ்லிம்கள் அங்குள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

முன்னதாக முஸ்லிம்கள் அதிகாலையில் குளித்து வீடுகளில் புத்தாடை அணிந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஆரத்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.பின்னர் மகிழ்ச்சியாக முககவசம் அணிந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

அங்கு அப்பகுதியில் உள்ள இமாம்கள் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பள்ளிப்பட்டு பேரித் தெருவில் உள்ள ஜூம்மா மசூதியில் பேஷ்-இமாம் முகமது உஸ்மான் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

சிறப்பு தொழுகைகள்

தொழுகை முடிந்த பிறகும் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த தொழுகையில் பள்ளிப்பட்டு, வெளியகரம், கத்திரிப்பள்ளி, கிருஷ்ணாபுரம் உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு இறைவன் பெயரால் ஆடுகளை அவர்கள் ‘குர்பானி‘ கொடுத்தனர். அதன் மாமிசங்களை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தனக்கும்,மற்றொரு பங்கை உறவினர்கள், நண்பர்களுக்காகவும், மூன்றாவது பங்கு இறைச்சியை ஏழைகளுக்கும் தானமாக வழங்கினார்கள்.

அதன்பிறகு நண்பர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி, ஆர்.கே பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர்பேட்டை, கனகம்மா சத்திரம் ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

குர்பானி

திருவள்ளூர் மசூதி தெருவில் உள்ள ஜிம்மா மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரளான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல ஈக்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், திருமழிசை, வெள்ளவேடு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உள்ள அனைத்து மசூதிகளில், முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஆடு, மாடுகளை குர்பானி செய்து, ஏழைகளுக்கு வழங்கியும் கொண்டாடினர்.

Next Story