முககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு ‘சீல்’ - கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை
முககவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம்,
முககவசம் மற்றும் தனி மனித இடைவெளியினை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா 3-வது அலையில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் கடை உரிமையாளர்கள் முககவசம் மற்றும் தனி மனித இடைவெளி போன்ற கொரோனா விழிப்புணர்வு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்.
கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சானிடைசரை கட்டாயமாக வைக்க வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே போல அலட்சியமாக செயல்பட்டால் கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.
இதற்காக அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் வரும் காலங்களில் தீவிரமாக ரோந்து பணியினை மேற்கொண்டு கடைகள், மார்க்கெட் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
காய்ச்சல் முகாம்களில் கொரோனா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களின் அறிகுறிகள் உள்ள அனைவரும் பங்கேற்று நோயினை விரைவிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story