தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த ஏற்பாடு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தகவல்


தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை  பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த ஏற்பாடு  தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தகவல்
x
தினத்தந்தி 22 July 2021 11:31 AM GMT (Updated: 22 July 2021 11:31 AM GMT)

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இந்த ஆண்டும், பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தெரிவித்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இந்த ஆண்டும், பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடந்து வருகிறது. இந்த ஆண்டு 439-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அமைச்சர் கீதாஜீவன்
சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் பனிமயமாதா ஆலயம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கொடியேற்றத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்று வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆலயத்தில் அனைத்து ஆராதனைகளும் வழக்கம் போல் நடைபெறும். ஆனால் மக்கள் பங்கேற்பு இன்றி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பப் படுகிறது, அதனை மக்கள் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடைபெறும் என்று கூறினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பனிமயமாதா ஆலய பங்கு தந்தை குமார் ராஜா, ஆலய செயலாளர் கென்னடி, துணைத்தலைவர் ஹாட்லி, பொருளாளர் ஜாய் ரோச், இணை செயலாளர் நேவிஸ்அம்மாள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சப்பரபவனி
திருமந்திர நகரான தூத்துக்குடியில் எழுந்தருளி இருக்கும் பனிமயமாதா ஆலய திருவிழாவை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால் திருவிழா மக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும்.தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5.8.21 அன்று நிறைவடைகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அறிவுறுத்தலின் படி இந்த ஆண்டு கொடிபவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகள் மற்றும் பொருட்காட்சி ஆகியவை நடைபெறாது.
கொடியேற்றம்
வருகிற 26-ந் தேதி காலையில் கொடியேற்றம் மக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும். அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருளுரை, அருளிக்க ஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் மக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும்.திருப்பலிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மக்கள் வீட்டில் இருந்தே ஜெபத்தோடும், பக்தியோடும் இந்த புனித நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இந்த நாட்களில் மக்கள் முககவசம் அணிந்து, இடைவெளி விட்டு அரசு சொல்லும் கட்டளைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அரசு ஒத்துழைப்புடன் செய்து உள்ளோம். மக்கள் கவனத்துடன் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பக்தியையும் குறைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனித்தனியாக...
ஆலயத்தில் திருப்பலிகள் வழக்கம்போல் நடைபெறும். திருப்பலி நடைபெறாத நேரத்தில் ஆலயம் திறந்து இருக்கும். மக்கள் தனித்தனியாக முககவசம் அணிந்து வந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களது பூஜைகளையும், காணிக்கைகளையும் செலுத்தலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story