பிளாஸ்டிக் வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு


பிளாஸ்டிக் வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 11:35 AM GMT (Updated: 22 July 2021 11:35 AM GMT)

பிளாஸ்டிக் வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு

பல்லடம், ஜூலை.23-
பல்லடத்தில்  அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், அரசால் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கப், பாலித்தீன் கவர் போன்றவை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மளிகை பொருட்கள், துணிக்கடைகள், மின்னணு சாதனங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
 பல்லடம் பகுதியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டீக்கடை மற்றும் ஓட்டல்களில் காபி, பால், சாம்பார், குருமா போன்றவை பாலித்தீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் தரப்படுகிறது. இதேபோல், மிக்சர், முறுக்கு போன்ற உலர்ந்த உணவுப்பொருட்களை பார்சல் செய்வதற்கும், பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கம்ப்யூட்டர் வாழை இலை என்ற பெயரில் பிளாஸ்டிக் வாழை இலைகளை, பல உணவு விடுதிகளும், வீட்டு விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இலையின் மேல் சூடான உணவுப்பொருட்களை வைக்கும்போது, இளகி அதிலுள்ள நச்சுப்பொருட்கள் உணவுப் பொருட்களோடு கலந்து, உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களில், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்வாழ் உயிரினங்களும் அந்த நிலப்பரப்பும் பாதிக்கின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story