வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அவலம்


வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அவலம்
x
தினத்தந்தி 22 July 2021 1:14 PM GMT (Updated: 22 July 2021 1:14 PM GMT)

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் செல்லும் வழியில் கழிவுநீர் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அவலம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாடைக்காவடி திருவிழா நடைபெறவில்லை. மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறக்கூடிய தெப்பத்திருவிழாவும் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கடந்த பங்குனி மாதம் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா மிக எளிமையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா அரசின் வழிகாட்டுதல் முறைப்படி நடைபெறுகிறது. இந்தநிலையில் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வழியில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த கழிவுநீர் தெப்பக்குளத்திற்கு செல்லும் வழியில் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அவலம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலங்கைமான் மகாமகாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் ஓடுவதை அப்புறப்படுத்தி தொற்று நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story