முத்துப்பேட்டை நகை பட்டறையில் வெள்ளி-பணத்தை கொள்ளையடித்த தொழிலாளி கைது


முத்துப்பேட்டை நகை பட்டறையில் வெள்ளி-பணத்தை கொள்ளையடித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 July 2021 6:47 PM IST (Updated: 22 July 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை நகை பட்டறையில் வெள்ளி, தங்கம்-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனாஜி(வயது 41). இவர், முத்துப்பேட்டை வாரச்சந்தை சாலையில் நகைக்கடை மற்றும் நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். கடந்த 7-ந்தேதி தனாஜி வழக்கம்போல் நகைக்கடையை பூட்டிவிட்டு பின்புறம் உள்ள நகை செய்யும் பட்டறையில் இருந்துள்ளார். பின்னர் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை வழக்கம்போல் கடைக்கு வந்து பார்த்தபோது நகை செய்யும் பட்டறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பட்டறையின் உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் வைத்து இருந்த 4½ கிலோ வெள்ளி, 5 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் தனாஜி முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த நகைப்பட்டறைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தனாஜி நகைப்பட்டறையை பூட்டி விட்டுச்சென்ற இரவு அந்த பட்டறைக்கு வந்த மர்ம நபர்கள் பட்டறையின் கதவில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த வெள்ளி, தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.

மேலும் கடையில் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்களின் உருவத்தையும், கைரேகை நிபுணர் மூலம் சிக்கிய முக்கிய தடயங்களை வைத்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மர்ம நபர் நாமக்கல் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த வேலாயுதம்(45) என்பதும் இவர் நகை செய்யும் கடைகளுக்கு முன்பு கொட்டிக்கிடக்கும் மணலை சேகரித்து எடுத்து செல்லும் தொழிலில் ஈடுபட்டு வருவதும் சம்பவத்தன்று நகை பட்டறையில் தனது கூட்டாளி முருகன் என்பவருடன் சேர்ந்து தனாஜிக்கு சொந்தமான பட்டறையின் பூட்டை உடைத்து வெள்ளி, தங்கம், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், வேலாயுதத்தை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, வெள்ளி, பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story