தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி
x
தினத்தந்தி 22 July 2021 7:37 PM IST (Updated: 22 July 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ்
நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த போது, மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 ஆயிரம் மெட்ரிக் டன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற மைல் கல்லை வெற்றிகரமாக கடந்து உள்ளோம். இதுவரை 2006.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை தவிர இதுவரை 11.19 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இங்கு இருந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், ஈரோடு, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 32 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு
எங்களது ஆக்சிஜன் விநியோக தகவல்கள் அனைத்தும், மத்திய அரசின் டிஜிட்டல் ஆக்சிஜன் கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் விநியோகம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, தேவையான பகுதிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகத்தை சிறப்பாக செய்ய அனைத்து உதவிகளையும் செய்து வரும் தமிழக அரசுக்கும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கும், அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆக்சிஜன் விநியோகத்தை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story