திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2021 7:48 PM IST (Updated: 22 July 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தலையில் துண்டை போட்டுக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தலையில் துண்டை போட்டுக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலையில் துண்டு போட்டு ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே  அணைக்கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற கட்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தலையில் துண்டு போட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்தியாகு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கேசவன், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விசுவநாதன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். 

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 50 அடி உயரத்திற்கு அணை கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கிடங்குகள் அமைத்திட வேண்டும். ஏரி, ஓடை நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். 

புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார். 

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மனு அளிக்க 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். 

Next Story